முன்னாள் பாஜக மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை புதிதாகத் தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கம், தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள போதிலும், அதை முழு நேர அரசியல் கட்சியாக மாற்றுவதில் நிலவும் தாமதம் காரணமாக ஆதரவாளர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் சில சலசலப்புகள் உருவாகியுள்ளன.
கட்சி தொடங்குவதில் நிபந்தனையும், தொண்டர்களின் அயற்சியும்
’வீ தி லீடர்ஸ்’ அமைப்பைத் தொடங்கிய அண்ணாமலை, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கை எட்டிய பின்னரே அதை முறையான அரசியல் கட்சியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொண்டர்கள் இயக்கத்தில் இணைந்த பின்னரே கட்சியாக மாற்றுவது என்பது அவரது வியூகமாக உள்ளது. இருப்பினும், ஏற்கனவே இயக்கத்தில் இணைந்து தீவிர களப்பணியாற்றக் காத்திருக்கும் உறுப்பினர்களுக்கு இந்நிபந்தனை ஒருவித அயற்சியையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களத்திற்கு முன்பாகவே முழுநேரக் அரசியல் அமைப்பாக உருவெடுத்தால் மட்டுமே களப்பணிகளை வேகப்படுத்த முடியும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

நகர்ப்புற ஆதரவும், பலவீனமான கிராமப்புறக் கட்டமைப்பும்
அண்ணாமலையின் அரசியல் பாணி குறித்து எழும் பிரதான விமர்சனங்களில் ஒன்று, அவரது ‘அர்பன் பாலிடிக்ஸ்’ (Urban Politics) சார்ந்த பிம்பமாகும். இணையதளம், ஊடகங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நகர்ப்புறங்களில் ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்திற்கு கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், தமிழகத்தின் அடிமட்டக் கிராமப்புறப் பகுதிகளில் இவ்வியக்கத்தின் கட்டமைப்பும், கொள்கைச் சேர்ப்பும் இன்னும் வலுவாகச் சென்றடையவில்லை. கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பைப் பலப்படுத்தாமல் அரசியல் கட்சியாக வெற்றிகரமாகச் செயல்படுவது கடினம் என்பதால், இலக்குகளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாகக் கட்சியை முறைப்படுத்தி கிராம மட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இயக்கத்தின் உள்ளிருந்தே பலமாக ஒலித்து வருகிறது.
’பாஜகவின் பி-டீம்’ விமர்சனமும், களத்தில் எழும் கோரிக்கைகளும்
இவ்வியக்கத்தில் தொடர்ந்து பாஜக ஆதரவாளர்களும், முன்னாள் பாஜக நிர்வாகிகளும் இணைந்து வருவது குறித்து மற்றொரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. பாஜக பின்புலம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக இயக்கத்தின் முக்கியக் கூட்டங்களில் ஆதிக்கம் செலுத்தினால், இது ‘பாஜகவின் பி-டீம்’ (B-Team) என்ற பிம்பத்தையே வலுப்படுத்தும் என தொண்டர்கள் அஞ்சுகின்றனர். எனவே, பாஜக ஆதரவாளர்களைக் கடந்து, பொதுமக்களையும் சாமானிய இளைஞர்களையும் உள்ளடக்கிய சுயாதீன இயக்கமாகக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் கிராமப்புறங்களிலும் சாமானிய மக்களிடத்திலும் இதற்கான உண்மையான வரவேற்பு கிடைக்கும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. இவ்விவகாரத்தில் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்து உள்ளாட்சித் தேர்தல் வரை இயக்கமாகவே தொடர்வாரா அல்லது தொண்டர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உடனடி அரசியல் கட்சியாக உருவெடுப்பாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
விஜயின் அடக்குமுறைக்கு திமுக பயப்படாது’: மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் அதிரடி பேட்டி!
