பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டனை, மற்றொரு பெண் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.


வலைவீசி பாலியல் வன்கொடுமை: வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். த.வெ.க. பிரமுகரான இவர், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றதாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வறுமையில் வாடும் பெண்களுக்குக் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களைத் தன் வசப்படுத்தி உறவு கொண்டதோடு, அதை ஆபாச வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டியுள்ளார். மேலும், தன் நண்பர்களிடமும் செல்ல வேண்டும் என அந்த வீடியோவைக் காட்டி அவர் மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி பாணி சம்பவம்: செல்போனில் ஆபாச வீடியோக்கள்!
புகாரைத் தொடர்ந்து மணிகண்டனைக் கைது செய்த காவல்துறையினர், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம், ‘பொள்ளாச்சி பாணி’ கொடூரம் எனப் பெண்கள் அமைப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இ வழக்கை சி.பி.சி.ஐ.டி. (CBCID) விசாரணைக்கு மாற்றக் கோரி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார்.
மீண்டும் பாலியல் புகார்: அதிரடி கைது!
மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்ததைத் தொடர்ந்து, சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புதிய புகார் அளித்துள்ளார். அதில், மணிகண்டனிடம் தான் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கூறித் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், த.வெ.க. பிரமுகர் மணிகண்டனை காவல்துறையினர் இன்று மீண்டும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
முன்னதாகக் கைது செய்யப்பட்டபோது சேலம் மாநகரக் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாததாலேயே அவர் எளிதில் ஜாமீனில் வெளிவந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது மீண்டும் அவர் மீது புகார் பதிவாகியுள்ளதால், இம்முறையாவது உரிய முழுமையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதியை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
