“ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் எண்ணெய் விற்க முடியாது” என ஈரான் அரசு அமெரிக்காவுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை முடக்குவோம் என அச்சுறுத்தல்: மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்!
அமெரிக்காவின் கடல்வழி முற்றுகைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எடுத்துள்ள இந்தத் தீவிர நிலைப்பாடு, உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எல்லோருக்கும் அனுமதி… அல்லது யாருக்கும் இல்லை!”
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் நோக்கில் அமெரிக்கா கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தி வரும் சூழலில், ஈரான் அரசு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியீட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “ஒன்று எல்லோரும் எண்ணெய் விற்க வேண்டும், இல்லையெனில் யாருமே விற்க முடியாது (Either all or none). ஈரானின் எண்ணெய் வணிகத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்துமானால், இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த எந்தவொரு நாடும் ஒரு துளி எண்ணெயைக் கூட வெளியேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.” என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் முடக்கம்
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதிக்கு அமெரிக்கப் படைகள் வந்துள்ளதால் அப்பகுதியில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்கா உடனடியாகப் பிராந்தியத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்றும், கடல்வழிப் போக்குவரத்துப் பழைய நிலைக்கு வரும் என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் அச்சம்
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் கணிசமான பகுதி கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்துள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சர்வதேச அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
