கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.

இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் வந்தது. கடந்த சில தினங்களாக கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்புக்கரை மற்றும் தலயாழம் ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஏராளமான வாத்துகள் திடீரென இறந்தன. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று கோட்டயம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நோய் பரவிய பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்பட 8 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும் 1 கிமீ சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நோய் பாதித்த பகுதியிலிருந்து 10 கிமீ சுற்றளவில் உள்ள பண்ணைகளிலிருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் இறைச்சி, முட்டைகளை விற்பனைக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதே போல பண்ணைகளுக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.