Homeசெய்திகள்க்ரைம்திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக ₹13.80 லட்சம் மோசடி: தாய், மகள், மகன் உட்பட...

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக ₹13.80 லட்சம் மோசடி: தாய், மகள், மகன் உட்பட 4 பேர் அதிரடி கைது! – தலைமறைவான நபருக்கு வலைவீச்சு

-

- Advertisement -

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி விவசாயியிடம் ₹13.80 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லில்

we-r-hiring

அரசு வேலை ஆசை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, காணாப்பாடியைச் சேர்ந்த விவசாயி வடிவேல் (54). இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (22), மகள் மகாகாளி (24) ஆகிய இருவரும் பட்டப் படிப்பு முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் காளிமுத்துப்பிள்ளை சந்தையைச் சேர்ந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ்பாலன் ஆகியோர் வடிவேலுக்கு அறிமுகமாகினர். பிள்ளைகள் வேலை தேடுவதை அறிந்த இருவரும், தங்களுக்குத் தெரிந்த கிரிதரன் என்பவரை வடிவேலுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

ரூ.13.80 லட்சம் சுருட்டல்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ‘ரெக்கார்ட் கிளர்க்’ வேலைக்கு ₹12 லட்சமும், திருச்சியில் வருமான வரித்துறை உதவி கண்காணிப்பாளர் வேலைக்கு ₹24 லட்சமும் செலவாகும் எனக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பிய வடிவேல், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம், பாலாஜி பவன் உணவகம் உள்ளிட்ட இடங்களில் வைத்து கிரிதரன், அவரது தாயார் விஜயலட்சுமி, தங்கை திவ்யா ஆகியோரிடம் மொத்தம் ₹13 லட்சத்து 80 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார்.

மேலும், இடைத்தரகராகச் செயல்பட்ட ஞானசேகரனுக்குத் தனியாக ₹1.10 லட்சம் வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட கிரிதரன் ₹20 முத்திரைத் தாளில் வேலை வாங்கித் தருவதாக உறுதிமொழிப் பத்திரமும் எழுதிக் கொடுத்துள்ளார்.

கொலை மிரட்டல்

பணத்தைப் பெற்றுக்கொண்டு நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததால் சந்தேகமடைந்த வடிவேல், நேரில் சென்று பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது கிரிதரன், அவரது தாயார் விஜயலட்சுமி, சகோதரி திவ்யா, சந்தோஷ்பாலன் மற்றும் ஞானசேகரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து வடிவேலை அசிங்கமாகப் பேசி, “மீண்டும் பணம் கேட்டால் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர்.

4 பேர் கைது – தொடரும் விசாரணை

இதனால் பாதிக்கப்பட்ட வடிவேல், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோசடி உண்மை என உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட கிரிதரன், அவரது தாயார் விஜயலட்சுமி, சகோதரி திவ்யா மற்றும் இடைத்தரகர் ஞானசேகரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சந்தோஷ்பாலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைதான கும்பல் இதே பாணியில் திண்டுக்கல் மாலைப்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மேலும் பலரிடமும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால், வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் சினிமா பாணி பயங்கரம்: ‘சர்ப்ரைஸ்’ தருவதாகக் கூறி ஓட்டல் அதிபரின் மனைவி படுகொலை! – 7 பவுன் நகைக்காகக் கொன்ற தம்பதி கைது

MUST READ