சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது வீட்டில் ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஆனந்தின் அண்ணன் அருண் என்பவருக்குத் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.


வீட்டின் உரிமையாளரான ஆனந்தும், ரவுடிகளான ஜெய் கணேஷ் மற்றும் சோட்டா ராம் ஆகியோரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு இவர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆனந்த் அங்கிருந்து கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.
முன்னாள் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராற்றின் எதிரொலியாக, இன்று அதிகாலை ரவுடிகள் ஜெய் கணேஷ் மற்றும் சோட்டா ராம் தலைமையிலான கும்பல் ஒன்று ஆனந்தின் வீட்டிற்குத் தேடிச் சென்றுள்ளது. அங்கு திடீரென அவர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது தடுக்க முயன்ற ஆனந்தின் அண்ணன் அருண் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தலையில் 5 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நொளம்பூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாகியுள்ள ரவுடிகள் ஜெய் கணேஷ், சோட்டா ராம் மற்றும் அவர்களது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நண்பர்களே குடித்துவிட்டு மோதிக் கொண்ட விவகாரத்தில் வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் முகப்பேர் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
