முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
யூடியூபர்கள் மீதான புகாரில் தாமதம் ஏன்?
நாம் தமிழர் கட்சி (NTK) ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது அக்கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புகாரின் மீது காவல்துறை எவ்வித வழக்குப்பதிவும் செய்யாமல் தாமதம் காட்டி வந்ததாகக் கூறி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதியின் அதிரடி உத்தரவு & கேள்விக்கணைகள்
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி காவல்துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி, “முதலமைச்சர் குறித்துப் பேசினால் மட்டும் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியது?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், நாம் தமிழர் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீதும் உடனடியாக வழக்குப்பதிவு (FIR) செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டார்.
