சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகை மற்றும் துணிக்கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை காட்டிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மாம்பலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் சிக்கிய இவர்களிடமிருந்து 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


நடந்தது என்ன?
சென்னை தரமணி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் சதீஷ், கடந்த 25-ஆம் தேதி தனது மனைவி ஷாலினி மற்றும் மகனுடன் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு வந்துள்ளார். அங்கு 3 சவரனில் புதிய செயின் வாங்கியதுடன், ஏற்கனவே தன்னிடம் இருந்த 1 சவரன் செயினையும் சேர்த்துத் தனது கைப்பையில் வைத்துள்ளார். கடை நிர்வாகம் வழங்கிய பரிசுப் பொருளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, கைப் பையில் இருந்த 4 சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பரிசுப் பொருள் வாங்கும் இடத்திலிருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இரண்டு பெண்கள் நகையைத் திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. இது குறித்து ஷாலினி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், இலங்கையைச் சேர்ந்த கிருபானந்தன் (55) என்பவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றவர். மூட்டு வலி சிகிச்சைக்காகச் சென்னை வந்துள்ள அவர், சிட்லபாக்கிலுள்ள தனது நண்பர் முரளிதரன் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 25-ஆம் தேதி மாலை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணிக்கடைக்குத் தனது மகள் நாச்சியார் மற்றும் நண்பருடன் சென்றுள்ள அவர், பணம் செலுத்தும் இடத்தில் நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் அவரை இடித்துவிட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்துத் தனது தோள்பட்டையிலிருந்த பையைப் பார்த்தபோது, அதிலிருந்த 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாகவும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் சிக்கிய கும்பல்:
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரிக்கக் கடைகளின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், ஒரே திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பெண்கள்தான் இந்தத் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதற்கிடையே, புதுச்சேரி கிராண்ட் பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கடையில் திருட முயன்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களைப் புதுச்சேரி போலீசார் கைது செய்த தகவல் மாம்பலம் போலீசாருக்குக் கிடைத்தது. உடனடியாகப் புதுச்சேரி போலீசாரைத் தொடர்புகொண்டு புகைப்படங்களைப் பெற்று ஆய்வு செய்ததில், சென்னையில் கைவரிசை காட்டியது இவர்கள்தான் என்பது உறுதியானது.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:
கைது செய்யப்பட்ட பெண்களைச் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ரஞ்ச்கடா மாவட்டம் குல்கேடி கிராமத்தைச் சேர்ந்த குஷ்பூ (40), மீனாட்சி (35), மற்றும் லட்சுமி பாய் (40) என்பது தெரியவந்துள்ளது.
இந்தத் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது தெலுங்கானா (ஹைதராபாத்), மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் சிறுவயதிலேயே கூட்ட நெரிசலில் திருடுவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதாகவும், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று கைவரிசை காட்டிவிட்டு வந்து சொந்த ஊரில் வீடு, கார், நிலபுலம் என ஜாலியாகவும் வசதியாகவும் வாழ்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்தில்தான் இவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர் என்பதால், இவர்களைத் தவிர இந்தத் திருட்டு கும்பலைச் சேர்ந்த வேறு யாராவது சென்னையில் தங்கியுள்ளனரா என்பது குறித்து மாம்பலம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் போராட்டங்களை வன்முறை என்று குழப்பிக்கொள்ளக் கூடாது
