பிரபல நிறுவனத்தின் டெண்டர் பெற்றுத் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலமாக லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேட்டுக்குப்பம், வானகரம், கிருஷ்ணா இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்திபாபு (35). இவர் கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (Indian Oil Corporation Ltd) நிறுவனத்தின் சார்பில் ரூ.4 கோடி மதிப்புள்ள ‘ஆட்டோமேட்டிக் டோர்ஸ்’ (Automatic Doors) டெண்டர் வரவிருப்பதாக மர்ம நபர் ஒருவர் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த டெண்டரை எடுக்க வேண்டுமெனில் முன்பணமாகப் பாதுகாப்புத் தொகை (Security Deposit) செலுத்த வேண்டும் என்று கூறி பல கட்டங்களாக மொத்தம் ரூ.12,70,520/- பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பச் செய்துள்ளனர். அதன்பிறகு அந்த நபர் எந்தத் தொடர்பும் கொள்ளாமல் தலைமறைவானதுடன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்திபாபு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் கைது நடவடிக்கை
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த சைபர் கிரைம் காவல்துறையினர், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கணக்கைக் கொண்டு தீவிர புலன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளரான மோகிலிகிட்டா மகேஷ் (33) என்பவர் தெலுங்கானா மாநிலம், மொய்னாபாத் வட்டாரத்தில் உள்ள மெடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உடனடியாக மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் சிறப்புப் படைப் பிரிவினர் தெலுங்கானா மாநிலத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மொய்னாபாத் காவல் நிலையத்தின் உதவியுடன் கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று எதிரி மோகிலிகிட்டா மகேஷை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அங்குள்ள கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் அவரைப் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கமிஷனுக்காக வங்கி கணக்கை வாடகைக்கு விட்ட நபர்
போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட மோகிலிகிட்டா மகேஷ் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருவது தெரியவந்தது. மேலும், புகார்தாரரைத் தொடர்பு கொண்டு ஏமாற்றிய முக்கியக் குற்றவாளியுடன் கூட்டுச் சேர்ந்து, தனது வங்கிக் கணக்கை மோசடி பணப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இப்புகார்தாரரிடமிருந்து வரவு வைக்கப்பட்ட பணத்தை மோசடி கும்பலிடம் அளித்துவிட்டு, அதற்கான கமிஷன் தொகையாக ரூ.2,75,000/- பெற்றுக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.
விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எதிரி மோகிலிகிட்டா மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்படி நேற்று (ஜூலை 29) சிறையில் அடைக்கப்பட்டார். ஆன்லைன் டெண்டர் மோசடிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
தூத்துக்குடியில் அதிர்ச்சி: பள்ளி கழிவறைக்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 சவரன் நகை பறிப்பு!
