உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென்கொரியாவின் முன்னணி பாப் இசைக்குழுவான BTS, தங்களது இசையை கிராமி விருதுப் போட்டிக்கு அனுப்பப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. ‘இசையை பிராந்தியத்தாலோ மொழியாலோ வகைப்படுத்தக் கூடாது’ எனக் கூறி எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு, சர்வதேச இசைத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
எதிர்ப்புக்கு காரணம் என்ன?
வழக்கமாக நடத்தப்படும் கிராமிய விருதுகளில், ஆசியக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் புதிதாக ‘சிறந்த ஆசிய பாப் இசைப் பிரிவு’ (Best Asian Pop Music Performance) அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இத்தகைய தனிப்பிரிவை உருவாக்கி ஆசியக் கலைஞர்களை பிரதான விருதுப் பிரிவுகளில் போட்டியிட விடாமல் தனியாக அடக்கப் பார்ப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆசியக் கலைஞர்களுக்கான ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் தங்களைச் சுருக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் BTS இந்தக் கடுமையான முடிவை முன்னெடுத்துள்ளது.

BTS உறுப்பினர்களின் உருக்கமான பதிவு
இதுகுறித்து BTS இசைக்குழுவின் உறுப்பினர்களான RM, ஜின், சுகா, ஜே-ஹோப், ஜிமின், வி மற்றும் ஜங்குக் ஆகிய அனைவரும் இணைந்து வெளியிட்டுள்ள பதிவில், “பிராந்தியம் மற்றும் மொழியால் இசை பிரிக்கப்படாமல், இசையாகவே கேட்கப்பட்டு விரும்பப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எனவே நடப்பாண்டு கிராமி விருதுகளுக்கான பரிந்துரையில் பங்கேற்க வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளோம்.” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் இசை வட்டாரங்களின் ஆதரவு
ஆசியக் கலைஞர்களின் திறமையை முதன்மைப் பிரிவுகளில் அங்கீகரிக்காமல், தனிப்பிரிவில் முடக்குவது சமத்துவத்திற்கு எதிரானது என BTS ரசிகர்கள் (‘ARMY’) மற்றும் பல்வேறு உலகளாவிய அமைப்புகளும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிராமி போன்ற சர்வதேச மேடைகளில் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த சூழலில், BTS குழுவினரின் இந்தத் துணிச்சலான முடிவு உலகளாவிய இசைப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
“செயற்கை சூரியன்” மூலம் மின்சாரமா?.. — சீனா உருவாக்கிய 582 மெட்ரிக் டன் அசுரக் காந்தத்தின் ரகசியம்!
