சென்னையின் முக்கியப் போக்குவரத்துச் சாலைகளில் ஒன்றான பல்லாவரம் – தொரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
காமாட்சி மருத்துவமனை முதல் சென்னை ஒன் வரை ஸ்தம்பிப்பு
சென்னை சுண்ணாம்புக் கொளத்தூர், காமாட்சி மருத்துவமனை சிக்னல் முதல் ‘சென்னை ஒன்’ (Chennai One) ஐடி பார்க் சிக்னல் வரையிலான சுமாரான 5 கிலோமீட்டர் தூரப் பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கின்றன. வழக்கமாக சில நிமிடங்களில் கடக்க வேண்டிய இந்தச் சிறு தூரத்தைக் கடப்பதற்கு தற்போது 45 நிமிடங்களுக்கும் மேலாவதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் – விபத்து அபாயம்
போக்குவரத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான காவலர்கள் இல்லாத சூழலால், சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கச் சிலர் அவசர அவசரமாக வாகனங்களை எதிர் திசையில் (Wrong-side) இயக்கி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடுமையான குழப்பம் நிலவுவதோடு, பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் அபாயகரமான சூழலும் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை
அலுவலக நேரங்களில் ஏற்படும் இந்தத் தொடர் போக்குவரத்து முடக்கத்தால் ஐடி ஊழியர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, சிக்னல்களைக் முறைப்படுத்தி, எதிர் திசையில் வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்திச் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
