தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கக் காங்கிரஸின் ஆதரவு தேவை என்பதால் கர்நாடக அரசைக் கேள்வி கேட்க தவெக அரசுக்குத் துணிச்சல் இல்லை என்றும், மத்திய பாஜக அரசை எதிர்த்துப் பேச அச்சப்படுகிறார்கள் என்றும் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கையும், அரசியல் சுயநலத்தையும் வெளிப்படையாக விமர்சித்தார்.
மூன்று மாத ஆட்சியில் ‘பாஜக’ என்ற வார்த்தை கூட இல்லை!
கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை முதலமைச்சரின் வாயிலிருந்து ‘பாஜக’ என்ற ஒரு வார்த்தை கூட வரவில்லை. மத்தியில் உள்ள பாஜக அரசை எதிர்த்து ஒரு விரலைக் கூட உயர்த்த அவருக்கு அச்சமாக இருக்கிறது.

அதேபோல், தமிழ்நாட்டில் ஆட்சியைக் தக்கவைக்கவும், தொடர்ந்து நடத்தவும் காங்கிரஸின் தயவு தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைத் தட்டிக்கேட்க எந்தவித துணிச்சலும் இல்லாமல் தவெக அரசு மௌனம் காத்து வருகிறது.”
டெல்லி நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தடுத்து நிறுத்தம்
“மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, நமது தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லிக்குச் சென்று போராட முயன்றனர். ஆனால், அவர்களின் நியாயமான போராட்டத்தைக் கூட கண்டுகொள்ளாமல், விவசாயிகளின் குரலை ஒடுக்க நினைப்பது வேதனையளிக்கிறது. காவிரி உரிமையை மீட்டெடுக்காமல், மாநிலத்தின் சுயமரியாதையை அடகு வைக்கும் வேலையைத் தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடி பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
