சீருடையில் மாணவர்களை அழைத்து வந்ததாக ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை; ராமநாதபுரத்தில் பரபரப்பு!


பள்ளி நேரத்தில் முறையான அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருச்சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர், தங்கள் பகுதி மாணவர்களுக்குப் பள்ளி நேரங்களில் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால் ஏற்படும் சிரமங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டார். இதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.
ஆட்சியர் உத்தரவும் போலிஸ் நடவடிக்கையும்
பள்ளி வேலை நாளில், மாணவர்களைச் சீருடையுடன் மனு அளிக்க அழைத்து வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், பள்ளி நேரத்தில் மாணவர்களை அழைத்து வந்தது தவறு எனச் சுட்டிக்காட்டினார். மேலும், மாணவர்களை அழைத்து வந்த ஸ்டீபன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஸ்டீபன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களின் பேருந்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண மனு அளிக்க வந்தவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
