செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அபிராமிபுரம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாகக் குடிநீர் முறையாக வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு சில நபர்கள் மின் மோட்டார் மூலம் குடிநீரைத் தனியாக உறிஞ்சி எடுப்பதால், இருளர் குடியிருப்பு உள்ளிட்ட ஏனைய பகுதி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய குடிநீர் முற்றிலும் முடங்கியுள்ளது.
தொடர்ந்து குடிநீரின்றித் தவித்து வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள், நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து எண்டத்தூர் – மதுராந்தகம் சாலையில் அபிராமிபுரம் என்ற இடத்தில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை உடனடியாகக் களைந்து தடையின்றித் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
