அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும், முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளை இருட்டடிப்பு செய்யத் துடிப்பதும் ஒருபோதும் ஈடாகாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் அனல் பறக்க முழங்கியுள்ளார். 
பெயர்களை மாற்றலாம்; வரலாற்றைத் துடைத்தெறிய முடியுமா?
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘அம்மா உணவகம்’, மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற பல திட்டங்களின் பெயர்களை முந்தைய ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சி எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இன்றி அப்படியே பாதுகாத்து அடுத்த ஆட்சியிடம் ஒப்படைத்தது. ஆனால், இன்றோ ஏழை எளிய மக்களுக்கான ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் இருந்து மட்டும் திட்டமிட்டு கலைஞரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, குடிசைகளில் வாழ்ந்த விளிம்புநிலை மக்களை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அழைத்து வந்த வரலாற்றுச் சிந்தனைக்குச் சொந்தக்காரர் கலைஞர். அந்தத் திட்டத்தின் பெயரிலிருந்து அவரது பெயரை நீக்கலாம்; ஆனால் கோடிக்கிரக்கான மக்களின் மனதில் பதிந்திருக்கும் அவரது வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது!

ஆளுநரிடம் மண்டியிட்ட அடிமைத்தனம்!
தமிழ்நாடு சட்டமன்ற மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்பதில் முந்தைய திராவிட மாடல் அரசு உறுதியாக நின்று தன் மாநில உரிமையை நிலைநாட்டியது. ஆனால், புதிய அரசோ ஆளுநரின் மிரட்டலுக்குப் பணிந்து, தேசிய கீதத்தை இரு முனைகளிலும் திணித்து தமிழகத்தின் உரிமையைச் சீட்டுக்கட்டு போல ஒடடைடைத்துவிட்டது. மாறாக, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் ஆளுநர் மட்டுமே கொடியேற்றிவந்த காலத்தைச் மாற்றி, இந்தியாவின் எந்த மாநில முதலமைச்சருக்கும் வராத சிந்தனையாகத் தன் மாநில முதலமைச்சரும் கொடியேற்றும் உரிமையைச் சட்டபூர்வமாகப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்பதை இந்த அடிமை அரசு மறந்துவிட்டது!

எதிரிகளின் கண்களை உறுத்தும் சமூக நீதி!
இந்தியாவே பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டபோது, அதற்கு எதிராகத் தன் இறுதி மூச்சுவரை சமரசமின்றிப் போராடிய ஒரே பேரியக்கம் திமுகதான். சமத்துவபுரம் தொடங்கி, விளிம்புநிலை மக்களின் சமூக மேம்பாட்டுக்காக அவர் கொண்டுவந்த திட்டங்களும், நீதிமன்றங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இட ஒதுக்கீடுகளும்தான் இன்றுவரை இனப்பகைவர்களை உறங்க விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் மறைந்த பிறகும் அவர் திட்டமிட்டு அவதூறுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்.
வீழ்ச்சியல்ல, மீண்டெழும் எழுச்சி!
இன்றைய தேர்தல் களம் ஏற்படுத்தியுள்ள பின்னடைவு என்பது திமுகவின் கருத்தியலுக்கோ கொள்கைக்கோ ஏற்பட்ட தோல்வி அல்ல; இது தற்காலிகமான ஒரு அரசியல் மாற்றமே தவிர வேறல்ல. எதிர்க்கட்சியாய் உட்காரக்கூட ஆளில்லாத காலங்களை எல்லாம் கண்டு, அங்கிருந்து எஃகுப் கோட்டையாக மீண்டு வந்த வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு. மேலும், “திமுகவை அழிக்க எவனுமே பிறக்கவில்லை!” என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ள ஆளுர் ஷாநவாஸ், எதிரிகள் விரிக்கும் வலையில் சிக்காமல், கலைஞரின் சாதுர்யமான மற்றும் முதிர்ச்சியான அரசியல் வழிகாட்டுதலைப் பின்பற்றி திராவிட இயக்கம் மீண்டும் வீறுகொண்டு எழும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தமிழினத்திற்குப் பிரகடனம் செய்துள்ளார்!
