டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல், வங்கிக் கணக்கு முடக்கத்திற்கு தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் கடும் கண்டனம்!
சைபர் கிரைம் மோசடி வழக்குகளில், வாடகைக்கு விடப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலமாக பெட்ரோல் பங்குகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, சட்டப்பூர்வமாக வணிகம் செய்யும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு, காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதாகவும் கூறி தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

கைது நடவடிக்கையும் விசாரணையும்:
தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு உதவியதாக சுமார் 837 பேரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதில் ஆண்கள், பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் எனப் பல தரப்பட்டவர்கள் அடங்குவர். மோசடி கும்பல் கொள்ளையடித்த பணத்தை வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் வாயிலாகப் பரிமாற்றம் செய்து வந்துள்ளது. இந்த பணப்பரிவர்த்தனை சங்கிலியின் ஒரு பகுதியாக, சிலரது கணக்குகளிலிருந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் பணம் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் நிலைப்பாடு:
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கை மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் (OMCs) அறிவுறுத்தலின்படி, பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கூகுள் பே, ஃபோன் பே போன்ற யுபிஐ (UPI) தளங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முழுவீச்சில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாளொன்றுக்கு 200 முதல் 500 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வரை நடைபெறுவதோடு, பல இடங்களில் மொத்த வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் டிஜிட்டல் முறையிலேயே புழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் வழங்கும் டிஜிட்டல் பணத்தை சாதாரண வணிக நடைமுறையின்படியே பங்க் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர். எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களின் பின்னணி மற்றும் நிதி ஆதாரங்களைச் சரிபார்க்கும் சாத்தியக்கூறுகள் டீலர்களிடம் இல்லை என்பதே தற்போதைய முக்கியப் பிரச்சினையாகியுள்ளது.
டீலர்களின் முக்கியப் புகார்களும் பாதிப்புகளும்:
கணக்குகள் முடக்கம்: சைபர் கிரைம் அதிகாரிகளின் உத்தரவைக் காரணம் காட்டி, வங்கிகள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கணக்குகளில் உள்ள தொகையை ‘லியன்’ (Lien) முறையில் முடக்குவதுடன், முதன்மை வணிக செயல்பாட்டுக் கணக்குகளையும் (Current Accounts) முழுமையாக முடக்குகின்றன. இதனால் தினசரி வணிகம் மற்றும் நிதிசார் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையின் கெடுபிடிகள்: உரிய முன்விவரங்கள் இன்றி, அதிகாலை வேளையில் டீலர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மணி கணக்கில் அமரவைத்து விசாரணை நடத்துவது நேர்மையான வணிகர்களுக்கு மன உளைச்சலையும் அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது.
சங்கத்தின் கடும் எச்சரிக்கையும் கோரிக்கைகளும்:
சைபர் குற்ற விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம், அறிமுகமில்லாத வாடிக்கையாளர் செய்யும் பரிவர்த்தனைக்காக நேர்மையான டீலர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவது ஏற்புடையதல்ல என்று எச்சரித்துள்ளது.
இந்த தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளிட்ட அனைத்து விதமான டிஜிட்டல் கட்டண முறைகளையும் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசரக் கோரிக்கைகள்:
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்த எழுத்துப்பூர்வமான விவரங்களை வழங்காமல் டீலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது.
வங்கிகள் முழு வணிகக் கணக்கையும் முடக்காமல், அந்த சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட பரிவர்த்தனை தொகையை மட்டும் முடக்க வேண்டும்.
நேரடி ஆதாரமின்றி டீலர்களைக் காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளைப் போல அச்சுறுத்தக் கூடாது என காவல் மற்றும் சைபர் கிரைம் துறையினருக்குத் தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எரிபொருள் நிலையங்களில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை புகார்களைக் கையாள்வதற்கு டீலர்களுக்குச் சாதகமான ‘நிலையான வழிகாட்டு நடைமுறையை’ (SOP) உடனடியாக உருவாக்க வேண்டும்.
பேரவையில் எதிரொலித்த ‘மேதகு பிரபாகரன்’ பெயர்: சபாநாயகரிடம் வன்னி அரசு சுவாரஸ்ய கேள்வி!
