Homeசெய்திகள்மாவட்டம்தூத்துக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - 1 மணி...

தூத்துக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

-

- Advertisement -

தூத்துக்குடி அருகே 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

3 மாத தட்டுப்பாடு… கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

தூத்துக்குடி அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு சிலுவைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில்கடந்த 3 மாதங்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலையில் திரண்ட பெண்கள்: வாகனங்கள் அணிவகுப்பு

அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று காலி குடங்களுடன் தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் உள்ள டேவிஸ் புரம் பகுதிக்கு திரண்டு வந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் திடீர் போராட்டத்தின் காரணமாக, அந்தப் பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

போலீசார் பேச்சுவார்த்தை – போராட்டம் வாபஸ்

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அரசுத் துறை அதிகாரிகள் மூலம் உடனடியாகக் குடிநீர் வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் கொந்தளிப்பு:

போராட்டத்தின் போது அப்பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்மணி பேசுகையில், “நம்பி வாக்களித்த மக்களை இந்த அரசு ஏமாற்றிவிட்டது. எங்களுக்கு உடனடியாகக் குடிநீர் வழங்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தொடர் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வோம்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மற்றும் வீராணம் ஏரி நிலவரம்: பூண்டியில் 4 செ.மீ. மழை பதிவானது!

MUST READ