சென்னை பெரம்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் ஆதரவாளரும், தவெக பிரமுகருமான ஜமால் முகமது உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் கே.கே.ஆர். அவென்யூ பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருபவர் ரியாஸ் (41). இவருக்கும், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் தீவிர ஆதரவாளரும், தவெக பிரமுகருமான ஜமால் முகமது என்பவருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜமால் முகமது குறித்து வழக்கறிஞர் ரியாஸ் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜமால் முகமது மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர் ரியாஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமான விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு சென்ற வழக்கறிஞர் ரியாஸை, ஜமால் முகமது மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கும்பலாக சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் வழக்குப்பதிவு
தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் ரியாஸ், உடனடியாக மீட்கப்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று புறநோயாளியாக (Outpatient) முதலுதவி மற்றும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் ரியாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், திரு.வி.க. நகர் காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள்: கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுடன் மிகவும் நெருக்கமாக வலம்வரும் ஜமால் முகமது உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்க கண்டனம் மற்றும் கோரிக்கை
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மீது பகிரங்கமாகத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழக்கறிஞரைத் தாக்கிய ஜமால் முகமது மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட வட்டாரங்களிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச ‘வைஃபை’ சேவை மீண்டும் தொடக்கம்!
