சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என சாடல் ஒருமனதாக நிறைவேற்ற வலியுறுத்தல் மருத்துவக் கல்வியை முடக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசு சார்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் இத்தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.
மாநில உரிமை மற்றும் சமூக நீதிக்கு எதிரான தேர்வு
சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துக் கடுமையாகச் சாடினார்.

“நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வு முறை தமிழ்நாட்டின் சமூக நீதிக்கும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்கும் முற்றிலும் எதிரானது. இது மாநிலங்களின் சுய உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது” என்று அமைச்சர் பேரவையில் சுட்டிக்காட்டினார்.
மாணவர் நலனில் தொடரும் பாதிப்புகள்
நீட் தேர்வு முறையால் பள்ளிப் பாடத்திட்டத்தின் மீதான மதிப்புக் குறைந்துள்ளதாகவும், அதிகக் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்களே லாபமடைவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். 12 ஆண்டுகாலப் பள்ளிப் படிப்பை புறந்தள்ளிவிட்டு, ஒரே ஒரு நாள் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிப்பது நீதியல்ல என்றும், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளால் தகுதியான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதும் சுட்டிக்காட்டப்பட்டது.
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
ஏற்கனவே நீட் விலக்கு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நிலையிலும், மத்திய அரசின் முட்டுக்கட்டைகள் தொடர்வதால், தேசிய அளவில் நீட் தேர்வை முற்றிலும் கைவிட ஏதுவாகச் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இத்தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
கல்வி மற்றும் மருத்துவத்தைச் சார்ந்த உரிமைகளை மாநிலங்களின் தேவைகளுக்கேற்பப் பயன்படுத்த அனுமதிப்பதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும் என்றும், கட்சி வேறுபாடின்றி இத்தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
“யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!” – காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!
