போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை – 80-வது சுதந்திர தின விழாவில் சலசலப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்துப் பொதுமக்கள் சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்வை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில், 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன் தலைமையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீர் முற்றுகைப் போராட்டம்:
விழா நடந்துகொண்டிருந்த வேளையில், 13-வது வார்டு கருமாரிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். தங்களது பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இது குறித்துப் பேரூராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி அவர்கள் ஆவேசமடைந்தனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், கொடியேற்ற நிகழ்வின்போதே பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமாதானம்:
பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் கொடியேற்றும் நிகழ்ச்சி பாதியிலேயே தடைபட்டு, பேரூராட்சி மன்ற வளாகத்தில் கடும் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயப்பன்பட்டி காவல் நிலையப் படையினர், பேரூராட்சி நிர்வாகத்தினரிடமும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உறுதிமொழி:
காமயகவுண்டன்பட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகச் சீரான குடிநீர் வழங்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனப் பேரூராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.
அதிகாரிகளின் உறுதியைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் விழா நிகழ்வுகள் தொடர்ந்தன. இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழாவின்போது பேரூராட்சி அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
