போக்சோ (POCSO) மற்றும் சில குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர்த்து, பிற வழக்குகளின் எஃப்.ஐ.ஆர் (FIR) நகல்களை ஆன்லைனில் பார்க்கும் வசதியை மீண்டும் கொண்டு வரக் கோரிய மனுவை அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி & மனுதாரரின் கோரிக்கை:
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: “முன்னதாகப் பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து எஃப்.ஐ.ஆர்-களையும் பொதுமக்கள் ஆன்லைனில் பார்க்கும் வசதி இருந்தது.

ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள CCTNS 2.0 திட்டத்தின் கீழ் புகார் அளித்த நபர் மற்றும் விசாரணை அதிகாரி மட்டுமே எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்கின் தன்மையை அறிய முடியாமல் முன்பிணை (Anticipatory Bail) போன்ற அவசரச் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தாமதம் ஏற்படுகிறது.
எனவே, உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர மற்ற வழக்கின் எஃப்.ஐ.ஆர்-களை ஆன்லைனில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பார்க்கும் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.”
நீதிமன்ற விசாரணை & அரசு தரப்பு விளக்கம்:
இவ்வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்: எஃப்.ஐ.ஆர் (FIR) நகலைப் புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
போக்சோ தொடர்பான வழக்குகள் மற்றும் சில குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்று தெளிவுபடுத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு:
காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்ட இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, வழக்கறிஞர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.
காவல்துறையினர் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – பிணவறையில் நீதிபதி தீவிர விசாரணை!
