திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற குட்கா கடத்தல் கும்பலை, பொதுமக்கள் துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாகனச் சோதனையும் கடத்தல் கும்பலும்
சேத்துப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா கடத்தப்படுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதியில் பெண் எஸ்.ஐ. லதா தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் வாகனத் தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

எஸ்.ஐ. மீது காரை ஏற்ற முயற்சி
போலீசாரைக் கண்டதும் காரை நிறுத்தாமல் தப்பிக்க நினைத்த கடத்தல்காரர்கள், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ. லதா மீது காரை வேகமாக மோதி ஏற்றிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டனர். இந்த துணிகரச் செயலில் இருந்து எஸ்.ஐ. லதா நூலிழையில் உயிர் தப்பினார்.
பொதுமக்கள் அதிரடி – இருவருக்குத் தர்ம அடி
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாகச் செயல்பட்டுத் தப்பியோட முயன்ற அந்த காரை இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்றனர். சிறிது தூரம் துரத்திச் சென்று காரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள், அதிலிருந்த 2 கடத்தல்காரர்களையும் வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காரில் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்காவைப் பறிமுதல் செய்த போலீசார், தர்ம அடி வாங்கிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு
