தொகுதி மறுவரையறை குறித்த ஆங்கிலப் புத்தகத்தில் தந்தை பெரியார் கூறியதாகத் தவறான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, புத்தக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பக நிறுவனத்திற்கு எதிராக ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடு கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி
பெங்களூருவைச் சேர்ந்த கவுதம் ஆர்.தேசிராஜு, டெல்லியைச் சேர்ந்த தீக்கித் பட்டாச்சார்யா ஆகியோரால் எழுதப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ‘ப்ளூஒன் இங்க்’ (BlueOne Ink) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் “பாரதத்தின் சிறந்த ஜனநாயகத்துக்கான தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலங்கள் மறுசீரமைப்பு“ (Delimitation and Reorganisation of States for a Better Indian Democracy). இந்தப் புத்தகத்தில், பிராமணர்களை ஒழிக்க வேண்டும் எனத் தந்தை பெரியார் கூறியதாகத் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகப் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனச் செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்
அவதூறு கருத்துக்கள்: பெரியாரின் பேச்சுகள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள வரிகளைக் மேற்கோள் காட்டுவது போல, தந்தை பெரியார் சொல்லாத கருத்துக்களை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறு ஏற்படுத்தும் வகையில் இதில் சேர்த்துள்ளனர்.
- புத்தகத்திற்குத் தடை: தந்தை பெரியாரைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கும் இந்த அவதூறுக் கருத்துக்களைப் புத்தகத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்; அதுவரை புத்தகத்தின் விற்பனைக்கும் விநியோகத்திற்கும் தடை விதிக்க வேண்டும்.
- நஷ்டஈடு: தந்தை பெரியாரின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்த போது, கி.வீரமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனேயே தந்தை பெரியாருக்கு எதிராக இத்தகைய அவதூறுக் கருத்துக்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன” என வாதிட்டார். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்துப் புத்தக எழுத்தாளர்கள்கவுதம் ஆர்.தேசிராஜு, தீக்கித் பட்டாச்சார்யா மற்றும் பதிப்பக நிறுவனமான ப்ளூஒன் இங்க் ஆகியோர் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
“மாற்றங்கள் கசப்பாக இருந்தாலும் கழக வளர்ச்சிக்கே”: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!
