மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.


தனது பயணத்தின் முதல் கட்டமாக கனடாவின் டொராண்டோ நகருக்கு இன்று செல்லும் அவர், அந்நாட்டின் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேனுடன் இணைந்து முதலாவது ‘இந்தியா – கனடா நிதிப் பேச்சுவார்த்தை’ நிகழ்வில் பங்கேற்கிறார். இதில் பொருளாதாரம், நிதித்துறை ஒத்துழைப்பு, முதலீடுகள், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து டொராண்டோவில் நடைபெறும் வர்த்தக மாநாடுகள் மற்றும் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் நிதியமைச்சர், முன்னணி கனடா நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளைச் சந்தித்து, கிப்ட் சிட்டி – சர்வதேச நிதி மையம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய முதலீட்டுச் சூழல்கள் குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரையிலான தனது அமெரிக்கப் பயணத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிகாகோ, ஆஷ்வில்லே மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார். சிகாகோவில் முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் நிறுவன தலைவர்களைச் சந்திக்கிறார். அங்குள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் போல் ஸ்கி தொழில்முனைவோர் மையத்தைப் பார்வையிட்டு, இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறார்.
