Homeசெய்திகள்இந்தியாஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

-

- Advertisement -

ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டைப் பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தி, அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

we-r-hiring

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் தொடர்புடைய நிறுவனங்களைக் குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. அதில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்த 4 இந்திய நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் & பின்னணி:

  • போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி (Fortis Partners LLP): ஈரானிய பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உதவியதற்காக இந்நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பங்குதாரர்களான இந்த்ரிஸ்மியா அஷாராஃப்மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோரும் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

  • சதாசிவ ஓவர்சீஸ் லிமிடெட் (Sadashiva Overseas Ltd): பிப்ரவரி 2024 முதல் ஜூன் 2025 வரை, அமெரிக்காவால் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட ‘போன்ஜூர் கம்மோடிட்டி எப்.இசட்.இ’ உள்ளிட்ட ஈரானிய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

  • பிபி சாஃப்டெக் பிரைவேட் லிமிடெட் (BP Softtech Pvt Ltd): ஜனவரி 2024 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்தில் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

  • பிரக்ருதீஸ் இன்ஃப்ரா இம்பெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Prakruthees Infra Impex India Pvt Ltd): இந்நிறுவனமும் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம்: ஈரானிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்குதல், சேமித்தல், விற்பனை செய்தல் மற்றும் போக்குவரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளில் நேரடியாகவும் தெரிந்தே ஈடுபட்டதால், Executive Order (E.O.) 13846-ன் பிரிவு 3(a)(ii)-ன் கீழ் இந்த 4 இந்திய நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சோஷியல் மீடியா தடை: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

MUST READ