முதலமைச்சர் விஜய் தன்கீழ் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், புதிய நிதிநிலை அறிக்கையில் உதவித் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 பேர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
முதலமைச்சரிடம் கோரிக்கை மனு:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய்யை, கடந்த ஜூன் 2-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நேரில் சந்தித்தனர்.

தற்போது வருவாய்த் துறை மூலம் ரூ.1,500 மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.2,500 என மொத்தம் ரூ.3,500 மட்டுமே பெற்று வரும் தங்களுக்கு, மாதாந்திர உதவித் தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள சுமார் 1 லட்சம் பேருக்கு உடனடியாக உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
நிதிநிலை அறிக்கையால் ஏமாற்றம்:
ஆனால், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உயர்வு தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறாதது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்:
இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 50 இடங்களில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20,000 பேர் பங்கேற்றனர். அதன் ஒரு பகுதியாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசுகையில்:
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் ரூ.3,500, ரூ.4,500, ரூ.5,500 எனவும்,
தெலங்கானாவில் ரூ.4,016 எனவும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் ரூ.3,500 தங்களது தற்போதைய வாழ்வாதாரச் சூழலுக்குப் போதுமானதாக இல்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
மானியக் கோரிக்கையில் அறிவிக்க வலியுறுத்தல்:இது குறித்துப் பேட்டியளித்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி ஜெயச்சந்திரன், “வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வரப்படவுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாதாந்திர உதவித் தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்த முதல்வர் — நெற்கதிர்கள் வழங்கி நெகிழ்ந்த பரந்தூர் கிராம மக்கள்!
