தேர்தல் செலவுக் கணக்கை தவறாகச் சமர்ப்பித்து, உண்மையான விவரங்களை மறைத்த குற்றத்திற்காக காங்கிரஸ் மூத்த நிர்வாகியான அசன் மௌலானா அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடித் தடை விதித்துள்ளது.


அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறிய செலவு
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அசன் மௌலானா வெற்றி பெற்றிருந்தார். இத்தேர்தலின் போது, அவர் ரூ. 17 லட்சம் மட்டுமே செலவிட்டதாகத் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் ரூ. 32 லட்சத்தைக் குறைத்துக் காட்டியதும், மொத்தமாக ரூ. 49 லட்சம் வரை தேர்தலுக்காகச் செலவு செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது. அப்போது நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பான ரூ. 30 லட்சத்தை விட இது மிக அதிகம் எனத் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகத் தவறிய வேட்பாளர்
இந்தத் தேர்தல் செலவு வரம்பு மீறல் மற்றும் கணக்கு முரண்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேர்தல் ஆணையம் தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இருப்பினும், அசன் மௌலானா நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்கத் தவறினார்.
3 ஆண்டுகள் போட்டியிடத் தடை
தேர்தல் செலவுக்கான உண்மையான கணக்கை தாக்கல் செய்யத் தவறியதோடு, அதை மறைக்க முயன்றதன் மூலம் அவர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளைத் தீவிரமாக மீறியுள்ளார். இதன் காரணமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அசன் மௌலானா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடத் தடை விதித்து முறைப்படி உத்தரவிட்டுள்ளது.
கே.என். நேருவுக்கு எதிராக அதிரடி! 19 இடங்களில் ஒரே நேரத்தில் DVAC சோதனை – தமிழக அரசியலில் பரபரப்பு
