60 நாட்களில் மூடுவதாகக் கூறிய வாக்குறுதி மீறல்; கடையை முற்றுகையிட்டுச் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் கொந்தளிப்பு!
அரியலூர் அருகே குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலம்:
அரியலூர் மாவட்டம், இடையார் கிராமத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் அப்பகுதிப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் கூறிப் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்புகளை மீறி முற்றுகை:
டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக வந்த பொதுமக்களை வழியிலேயே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துத் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், காவல்துறையின் தடையை மீறிப் பொதுமக்கள் முன்நோக்கிச் சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், அதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
சாலையில் அமர்ந்து முழக்கம்:
போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடைக்கு முன்பாகச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையை உடனடியாக மூடி அகற்றிட வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் அவர்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
வாக்குறுதி மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு:
“கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது, ‘இன்னும் 60 நாட்களில் கடை முற்றிலும் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசு அதிகாரிகளின் இந்த வாக்குறுதி மீறலே தற்போதைய போராட்டத்திற்கு முக்கியக் காரணம்” எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் இடையார் கிராமத்தில் தொடர் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
