திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை, போலிசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது போலிசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்படை தேடுதல் வேட்டை
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ரவுடி ராஜாவைப் பிடிக்கத் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மீது கத்தி வீச்சு
இந்நிலையில், சிக்கனம்பட்டி பகுதியில் ரவுடி ராஜா பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தனிப்படை போலிசார் அப்பகுதியைச் வளைத்துப் பிடித்தனர்.
அப்போது போலிசாரிடம் சிக்காமல் இருக்க, ரவுடி ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துத் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத்தின் கையில் வெட்டிவிட்டுத் தப்பி ஓட முயன்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு & மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த நிலையிலும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை போலிசார் ரவுடியை எச்சரித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து தப்ப முயன்றதால், தற்காப்பிற்காகவும் குற்றவாளியைப் பிடிப்பதற்காகவும் போலிசார் ரவுடி ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாகப் பிடித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ராஜா மற்றும் கத்திவெட்டுக் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத் ஆகிய இருவரையும் போலிசார் உடனடியாக மீட்டுத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துச் சின்னாளபட்டி போலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள்!
