Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழர்களின் கொண்டாட்ட நாயகன் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா காலமானார்: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்...

தமிழர்களின் கொண்டாட்ட நாயகன் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா காலமானார்: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்!

-

- Advertisement -

தமிழ்ப் பட்டிமன்ற உலகின் தவிர்க்க முடியாத முகமும், பிரபலத் தமிழ் அறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழர்களின் கொண்டாட்ட நாயகன் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா காலமானார்: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்!

சிகிச்சை பலனின்றி பிரிந்த உயிர்
மதுரை ஞான ஒளிவுபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

we-r-hiring

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 90.

எளிய பின்னணியில் தொடங்கி தமிழ் உலகை வென்ற ஆளுமை
மாநகராட்சிப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்ற சாலமன் பாப்பையா, தமிழ் மொழி மீது கொண்ட அளப்பரிய பற்றால் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பண்டைய தமிழிலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்ற இவர், திருக்குறளுக்கு எளிய முறையில் உரை எழுதியவர்.

புறநானூற்றுக்கு புதிய வரிசையமைத்து, கம்பராமாயணத்தை ஆழமாக ஆய்ந்தறிந்த இலக்கிய விற்பன்னராகத் திகழ்ந்தார்.

இலக்கியச் செறிவை சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிய மொழியிலும், நகைச்சுவை உணர்வோடும் எடுத்துரைப்பதில் இவர் தனித்துவமான திறமை பெற்றிருந்தார்.

பட்டிமன்றம் என்றாலே “சாலமன் பாப்பையா” தான் எனும் அளவுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடுவராக நின்று வழிநடத்தியுள்ளார். ‘பாப்பையா பரம்பரை’ என்று சொல்லும் அளவுக்குத் தன்னைப் போலவே பல திறமையான பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாக உருவாக்கினார்.

திரைப்படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கு, தமிழ்த்தொண்டிணைப் பாராட்டி இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது 2021-ஆம் ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் தன் அரும்புதல்வனை இழந்துவிட்டாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ், மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் அவர்.

தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர். திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.

கடந்த ஆண்டு மே மாதம் மதுரை சென்றிருந்தபோது என்னை வாஞ்சையோடு வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம் ‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லி வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

முழுக்கண்ணீரில் தமிழ் உலகம்
சாலமன் பாப்பையாவின் மறைவு செய்தி பரவியதைத் தொடர்ந்து, இலக்கியவாதிகள், திரைத்துறைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பட்டிமன்றக் கலைக்கு புதிய பரிமாணம் தந்த ஒரு மாபெரும் தமிழ்ச் சான்றோனின் மறைவு, தமிழ் உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

“ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகமா?” – இத்திட்டத்தைக் கைவிடக் கோரி அதிமுக அதிரடி அறிக்கை!

MUST READ