சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 36-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்டமளிப்பு விழா என்பது பட்டம் பெறுவதோடு முடிந்துவிடுவதில்லை; மாறாக, வாழ்க்கையில் நாம் கற்க வேண்டிய கல்விக்கான உண்மையான தொடக்கமே இதுவாகும்.
திருக்குறள் கூறுவது போல, பணம் மற்றும் சொத்துக்களை இழந்தாலும் கல்வி என்றும் அழியாது.
பட்டம் பெற்ற பிறகு மாணவர்களுக்கு ஆணவமும் அகந்தையும் வரக்கூடாது. அறிவியலாளர் ஐசக் நியூட்டன், “முன்னோடி விஞ்ஞானிகளின் தோள் மீது நின்றுகொண்டுதான் என்னால் இதைச் செய்ய முடிந்தது” எனக் கூறிய பணிவை இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – ஈரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் போரினால் சூழப்பட்டு, உலகளவில் கடும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இருப்பினும், கச்சா எண்ணெய் மற்றும் விவசாய உரங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டே, போர் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தாமல் இந்திய அரசு திறம்படச் செயல்பட்டு வருகிறது.
உலக நாடுகள் பலவும் சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தியாவில் மட்டுமே நிலையான தன்மை (‘ஸ்டெபிளிட்டி’) உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் திறம்பட்ட தலைமையால் நாடு 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகள் இன்று உலகின் முன்னணி கார் உற்பத்தி மையங்களாகவும், செல்போன் ஏற்றுமதித் தளங்களாகவும் உருவெடுத்துள்ளன. இதனால் இளைஞர்களுக்குப் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ‘ஜென்-சி’ இளைஞர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வேலைக்குச் சென்றாலும் அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்கினாலும், சமுதாயத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நாட்டின் நலனை முதன்மையாக வைத்துப் பணியாற்ற வேண்டும் என்று நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
