தமிழக கடல் எல்லைக்கு அப்பால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுருக்குமடி வலையை தமிழகத்தின் 12 நாட்டிக்கல் மைல் கடல் எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு கடந்த 2000ம் ஆண்டு தடை விதித்திருந்தது.


இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தமிழகத்தின் 12 நாட்டிக்கல் மைல் எல்லைக்கு அப்பால் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் உரிய அனுமதிகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் சுருக்குமடி வலையை எடுத்துக்கொண்டு 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள மத்திய அரசின் கடற்பரப்புக்குச் செல்ல தமிழக அரசு அனுமதிப்பதில்லை என முறையிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று தமிழக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மீன்பிடி தடைக்காலம் இல்லாத நிலையிலும் சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் சுருக்குமடி வலையை முழுமையாகத் தடுப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், தமிழக அரசின் இந்த செயல்பாடு சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சுருக்குமடி வலையுடன் மீனவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதார மண்டல பகுதிக்குச் செல்வதற்கான அனுமதிகளை தமிழக அரசு தாமதப்படுத்துவதாகவும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன் என்பது குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
