தமிழக சிறுகுறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜா சொந்த தொகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோமஸ்புரம் அருகே அமைந்துள்ளது நேரு நகர் சுனாமி காலனி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் குடிநீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


எனவே, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேரு நகர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திருநங்கைகள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என இன்று குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் கோமஸ்புரம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நேரு நகர் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர், குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து சாலையோரத்தில் இருந்த பெரிய பாராங்கற்களை சாலையில் போட்டு எந்த வாகனமும் செல்லாதபடி மறியலில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து கல்லை போட்ட ராபர்ட்டிடம் அங்கே இருந்த இரண்டு காவலர்கள் சாலையில் கல்லை போடாதே என கெஞ்சினர். ஆனால் காவல்துறை கெஞ்சியதையும் கண்டுகொள்ளாத ராபர்ட் தனது அட்ராசிட்டியை விடாமல் தொடர்ந்து சாலையில் படுத்து, இந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்றால் இந்த மறியலை கைவிட மாட்டோம், எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வேண்டும், குடிநீர் கிடைத்தால் தான் நாங்கள் மறியலை கைவிடுவோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
தாங்கள் 2,000 ரூபாய் வாடகை கொடுத்து வசிப்பதாகவும், ஆனால் குடிநீருக்காக மட்டும் மாதம் 2,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும், குளிக்க, உணவு சமைக்க உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் தொடர்ந்து தாங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும், எனவே உடனடியாக தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம்: தவெக அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்த மீனவர்கள்!
