தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இன்று (அக்டோபர் 2) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.


தொலைதூர பேருந்துகளிலும் இலவச பயணம்
இதுவரை மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வந்தனர். தற்போது ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இந்த வசதி மேலும் பல அரசு பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். மேலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் இந்த கட்டணமில்லா பயண வசதி வழங்கப்பட்டுள்ளது.
12,692 அரசு பேருந்துகள்
தமிழ்நாட்டில் செயல்படும் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தின் கீழ் மொத்தம் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட பேருந்து நடைகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான உச்சவரம்பு இல்லை
இந்த இலவச பயணத்தைப் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல், பயணங்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மட்டுமின்றி திருநர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம்.
ரூ.6,000 கோடி செலவு
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது. மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்கு செல்லவும், பெண்கள் பணியிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணம் மேற்கொள்ளவும் இந்த விரிவாக்கம் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
கோயம்பேட்டில் தொடக்கம்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது பேருந்தில் பயணித்த மகளிருக்கு முதல்வர் விஜய் பயணச்சீட்டுகளை வழங்கினார்.
