தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.


இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. ஒன்றிய அரசின் காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் போராட்டக்காரர்களைக் கூடவிடாமல் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எம்.ஏ.பேபி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கைது!
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்.எல்) தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களான பினராயி விஜயன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உள்ளிட்ட பலர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தலைவர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காவல்துறை வாகனத்தில் வைத்துச் சுற்றி வருவதாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு!
டெல்லியில் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகள், அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
