ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே ஜீவா (36) என்ற இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரத்தில் அவரது உடல் வீசப்பட்டிருந்த நிலையில், அதைக் கைப்பற்றிய போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் ஜீவா (36) என்பது தெரியவந்துள்ளது.
ஜீவா சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்ட இடம் வேறா அல்லது சடலம் சர்வீஸ் சாலையோரத்தில் கொண்டு வந்து வீசப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாகத் தகவல்
உயிரிழந்த ஜீவா மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், கொலையில் ஈடுபட்டவர்கள் யார், சம்பவம் எப்போது நடைபெற்றது, கொலைக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் விசாரணை முடிவில் கொலை தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
