Homeசெய்திகள்தமிழ்நாடுகுட்கா முறைகேடு வழக்கை 3 மாதங்களில் எப்படி முடிக்க முடியும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்...

குட்கா முறைகேடு வழக்கை 3 மாதங்களில் எப்படி முடிக்க முடியும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

குட்கா முறைகேடு வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பது எப்படி என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குட்கா முறைகேடு வழக்கை 3 மாதங்களில் எப்படி முடிக்க முடியும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டியிருப்பதாகவும், 498 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

we-r-hiring

26 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என மொத்தம் 26 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மனு

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத பலர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூல நகல்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 4-ஆம் தேதி, 12 வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

கூடுதல் அவகாசம் கோரிய சிறப்பு நீதிமன்றம்

இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கை விசாரித்து முடிக்க மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கோரி, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்துக்குக் கடிதம் அனுப்பியது.

இந்த விவகாரம் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரானவர்கள், இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், 498 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வழக்கு இன்னும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் விளக்கமளித்தனர்.

நவம்பர் 6-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதையடுத்து, ஏராளமான சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ள நிலையில், குட்கா முறைகேடு வழக்கை மேலும் மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பது எப்படி என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வழக்கை விரைந்து முடிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

“நிர்மல் குமாரை சஸ்பெண்ட் செய்வீர்களா?”: தவெக அரசை நோக்கி சூர்யா வெற்றிக்கொண்டான் எழுப்பிய கேள்விகள்!

MUST READ