Homeசெய்திகள்இந்தியாடெல்லி - வாரணாசி வெறும் 3.5 மணி நேரம்! புதிய புல்லட் ரயில் திட்டம் குறித்து...

டெல்லி – வாரணாசி வெறும் 3.5 மணி நேரம்! புதிய புல்லட் ரயில் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

-

- Advertisement -

இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில், டெல்லி முதல் அசாம் மாநிலம் கவுகாத்தி வரை இணைக்கும் வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம் உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

we-r-hiring

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வாரணாசியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். வாரணாசி – புதுடெல்லி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

1,500 கி.மீ. தூரம் – முக்கிய நகரங்கள் இணைப்பு

சுமார் 1,500 கிலோமீட்டர் தூரம் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த புல்லட் ரயில் வழித்தடம், டெல்லியில் தொடங்கி ஆக்ரா, கான்பூர், லக்னோ, அயோத்தி, வாரணாசி, பிரயாக்ராஜ், பாட்னா, சிலிகுரி வழியாக கவுகாத்தியைச் சென்றடையும்.

இந்த வழித்தடம் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதுடன், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயண நேரம் கணிசமாகக் குறையும்!

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், டெல்லி – ஆக்ரா இடையேயான பயணம் 59 நிமிடங்களிலும், டெல்லி – கான்பூர் பயணம் 1 மணி நேரம் 45 நிமிடங்களிலும் நிறைவடையும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், டெல்லி – லக்னோ இடையே 2 மணி நேரம் 12 நிமிடங்களும், லக்னோ – வாரணாசி இடையே 1 மணி நேரம் 21 நிமிடங்களும் ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வாரணாசி – டெல்லி இடையேயான பயண நேரம் சுமார் 3 மணி நேரம் 33 நிமிடங்களாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி – சிலிகுரி இடையேயான தற்போதைய சுமார் 20 மணி நேரப் பயணத்தை 6 மணி நேரமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவாக இருக்கும் – மேக் இன் இந்தியா திட்டம்

புல்லட் ரயில் வசதி வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரியதாக இருக்காது என்றும், விமானக் கட்டணத்தைவிடக் குறைவான, சிக்கனமான கட்டணத்தில் பயணிகள் பயணிக்க முடியும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இந்தியத் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வழித்தடத்துக்கான வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திட்டத்தின் கட்டுமான கால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகப் படுகொலை… வாக்களிக்கும் உரிமை பறிப்பு!’ – டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி!

MUST READ