Homeசெய்திகள்மாவட்டம்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே அறிமுகம் செய்த மதபோதகர்!...

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே அறிமுகம் செய்த மதபோதகர்! – வைரலாகும் வீடியோ

-

- Advertisement -

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுவார் என மதபோதகர் மோகன் சி. லாசரஸ் ஜெபக்கூட்டத்தில் அறிமுகப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கட்சித் தலைமையும் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் இசக்கி சுப்பையா?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஜெபக்கூட்டத்தில் வேட்பாளராக அறிமுகம்

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஜெபமலையில் மதபோதகர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் இசக்கி சுப்பையா, தவெக தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூவரும் மேடையில் இருந்தபோது பேசிய மதபோதகர் மோகன் சி. லாசரஸ், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு மறுதேர்தல் வரவுள்ளதாகவும், அதில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் இசக்கி சுப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி ஜெபம் செய்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் அறிமுகம்: சர்ச்சை

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைமையும் அத்தொகுதிக்கான வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்தகைய சூழலில், மதபோதகர் ஒருவர் ஜெபக்கூட்டத்தில் இசக்கி சுப்பையாவை தவெக வேட்பாளராகக் குறிப்பிட்டுப் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, இடைத்தேர்தலில் தனக்கே வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இசக்கி சுப்பையா செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே தனது பெயரில் சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

தற்போது அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுவர் விளம்பரங்கள் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மோகன் சி. லாசரஸ் ஜெபக்கூட்டத்தில் இசக்கி சுப்பையாவை வேட்பாளராக அறிமுகப்படுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இசக்கி சுப்பையாவுக்கு தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் வாய்ப்பு வழங்குமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

புயல் காலத்தில் மட்டுமே அதிகாரிகள் வருவதா? பழவேற்காடு மீனவர்கள் ஆவேசம்! நிரந்தர மாற்று இடம் வழங்கக் கோரிக்கை

MUST READ