வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் காணாமல் போன பள்ளி மாணவிகள் சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டு, பேர்ணாம்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மாணவிகளைச் சென்னை போலீசார் மீட்ட நிலையில், பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் குழுவினர் சென்னையிலிருந்து மாணவிகளைப் பேர்ணாம்பட்டுக்கு அழைத்து வந்தனர்.

பள்ளி மாணவிகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மாணவிகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறியதற்கு செல்போன் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகளே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவிகள் வீட்டில் செல்போன் பயன்படுத்தக் கூடாது எனப் பெற்றோர் அறிவுறுத்தியதாகவும், பள்ளியிலும் செல்போன் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறியதற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான தகவல்களைச் சேகரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரணாம்பட்டு அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவிகள் திடீர் மாயம்!
