Homeசெய்திகள்சென்னைமீனவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும்! – திமுக எம்.பி....

மீனவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும்! – திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை

-

- Advertisement -

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.மீனவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும்! – திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை

மேலும், தமிழக அரசு மக்களின் உயிர்கள் குறித்து கவலைப்படாமல் ரீல்ஸ் வெளியிடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

சென்னை காசிமேடு கடற்கரையிலிருந்து மீன்பிடிக்க ஆந்திர மாநிலக் கடல் பகுதிக்குச் சென்ற வடசென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் முரசு புயலில் சிக்கி மாயமாகினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய, மாநில அரசுகள் தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாயமான 9 மீனவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. அவர்களில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன.

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜயகாந்த் என்பவரின் உடலுக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, மாயமான மீனவர்களை மீட்கும் பணியை ஒன்றிய, மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். ஆனால், 9 பேரில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக வந்த தகவல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கடலில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தால் முழுமையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய தவெக அரசு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதில் தற்போது ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.5 லட்சம் பின்னர் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

ரூ.7 லட்சம் என்பது மீனவர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்குப் போதுமானதாக இருக்காது எனக் கூறிய கலாநிதி வீராசாமி, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போல, கடலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்த அவர், “தமிழக அரசு ரீல்ஸ் போடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறது. தமிழக மக்களின் உயிர்கள் குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

மீன்வளத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கூட உரிய முறையில் பேசாமல் சென்றுவிட்டதாகவும், அவர் எந்தக் கேள்வி கேட்டாலும் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று கூறுவதில் பெயர் பெற்றவர் என்றும் விமர்சித்தார்.

மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் கலாநிதி வீராசாமி கூறினார்.

ஆந்திராவில் இருந்து காசிமேடு கொண்டுவரப்பட்ட மீனவர் மோகனின் உடல் – அமைச்சர், எம்எல்ஏ நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்!

MUST READ