சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில், பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தின் நிகழ்ச்சியில் படத்தின் எடிட்டர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி, அண்மையில் நடைபெற்ற தனது மகன் தீபக் ரவி – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்ட விவகாரம், தன்னை திமுகவின் பினாமி என்று விமர்சிப்பது மற்றும் தனது அரசியல் வருகை குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
தனது மகனின் திருமணத்தைச் சிறுவயது முதலே கடினமாக உழைத்துச் சம்பாதித்த சொந்தப் பணத்திலேயே நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், தன்னை திமுகவின் பினாமி என்று சிலர் விமர்சிப்பதாகவும், ஆனால் தான் எந்தக் கட்சிக்கும் பினாமியாகச் செயல்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தாம் திமுகவின் பினாமி என்பதை யாராவது ஆதாரத்துடன் நிரூபித்தால், அவர்களுக்கு ரூ.1 கோடியை வெள்ளைப் பணமாக வழங்கத் தயாராக இருப்பதாக அதிரடியாகச் சவால் விடுத்தார்.
தனது மகன் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பிராமணர்களும் இந்த ஊரில்தான் வசிக்கிறார்கள் என்றும், திருமணத்தில் சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று கூறியது தனது சொந்த முடிவுதான் என்றும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் திட்டம் இருப்பதாகவும் கண்ணன் ரவி வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் பணம் செலவானாலும் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று குறிப்பிட்ட அவர், தனது தொகுதிக்கு நல்லது செய்ய முன்வரும் கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறங்குவேன் என்றும் கூறினார்.
‘பேங் பேங்’ திரைப்பட நிகழ்ச்சியில் கண்ணன் ரவி தெரிவித்த இந்தக் கருத்துகள், அவரது மகன் திருமணத்தைச் சுற்றிய சர்ச்சை மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு அவர் அளித்த பதில்கள் காரணமாக தற்போது கவனம் பெற்றுள்ளன.
