ஃபேஸ்புக் மூலம் லண்டன் பெண் போல் அறிமுகமாகி, பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த 44 வயது நபரிடம் ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 800 மோசடி செய்த நைஜீரிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஃபேஸ்புக் நட்பு மூலம் தொடங்கிய மோசடி!
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த 44 வயது நபருக்கு ஃபேஸ்புக் மூலம் ‘பிளோரன்ஸ் சிமாசன்’ என்ற பெயரில் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அழகான புகைப்படங்கள், இனிமையான பேச்சு மற்றும் அன்பான வார்த்தைகள் மூலம் அந்த நபருடன் நட்பை வளர்த்துள்ளார்.
பின்னர் இருவரும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், உங்களுக்கு ஐபோன், விலை உயர்ந்த காலணிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அனுப்புவதாகக் கூறி அந்த நபரின் வீட்டு முகவரியையும் பெற்றுள்ளார்.
தங்க நகைகள், அமெரிக்க டாலர்கள் வந்துள்ளதாகக் கூறி மிரட்டல்!
சில நாட்களுக்குப் பிறகு மர்ம நபர்கள் அந்த நபரைத் தொடர்புகொண்டு, தாங்கள் டெல்லியில் இருந்து பேசும் சுங்கத்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
உங்கள் பெயரில் தங்க நகைகள், அமெரிக்க டாலர்கள் மற்றும் ஐபோன் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாகவும், அதற்குச் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். பணம் செலுத்தாவிட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்ற ஆசையிலும், போலீஸ் நடவடிக்கை குறித்த அச்சத்திலும் இருந்த அந்த நபர், மர்ம நபர்கள் கூறியதை நம்பியுள்ளார்.
6 நாட்களில் ரூ.12.59 லட்சம் மோசடி!
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வெறும் 6 நாட்களில் தனது வங்கிக் கணக்கு மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலமாகப் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 800 பணத்தை அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய பிறகு பார்சல் குறித்த விவரங்களையும், அதற்கான ரசீதுகளையும் கேட்டபோது மர்ம நபர்கள் தொடர்பைத் துண்டித்துள்ளனர். இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் பதுங்கியிருந்த நைஜீரிய வாலிபர் கைது!
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தொடர்புடைய வங்கிக் கணக்குகள், வாட்ஸ் அப் எண்கள் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோசடி கும்பல் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையிலான போலீசார் டெல்லிக்குச் சென்று, நைஜீரியாவைச் சேர்ந்த மொடேஸ்டு சோகேஜிஏ (33) என்ற வாலிபரைக் கைது செய்தனர்.
நைஜீரியாவுக்கு பணம் அனுப்பியது அம்பலம்!
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கூட்டாளியான எபுகா என்பவருடன் இணைந்து புதுச்சேரி நபரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், மோசடி மூலம் கிடைத்த பணத்தில் செலவுகளுக்குப் போக மீதமிருந்த தொகையை வெஸ்டர்ன் யூனியன் (Western Union) பணப் பரிமாற்ற சேவை மூலம் நைஜீரியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்திய மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவரைப் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கீர்த்திவர்மன் தெரிவித்துள்ளார்.
