ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படத்தின் காட்சிகளை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று படத்தின் தயாரிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இணையத்தில் பரவும் திருட்டுத்தனமான காட்சிகள்
நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குள் மொபைல் போன்கள் மூலம் படத்தின் காட்சிகளைப் பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் பகிர்வு செயலிகள் வழியாகப் பரப்பி வருவது தயாரிப்புக் குழுவின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற உத்தரவு
இதையடுத்து, படக்குழு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் சட்டப்பூர்வ எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த நவம்பர் 2 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உத்தரவுகளின்படி, ‘ராமாயணா’ திரைப்படத்தையோ அல்லது அதன் எந்தவொரு பகுதியையோ உரிய அனுமதியின்றிப் பதிவு செய்வது, இணையத்தில் பதிவேற்றுவது, பகிர்வது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்
அனுமதியின்றித் திரைப்படக் காட்சிகளைப் பதிவு செய்து பகிர்வது, காப்புரிமைச் சட்டம் 1957, திரையரங்கச் சட்டம் 1952, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் குற்றமாகும் எனப் படக்குழு எச்சரித்துள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறுவது நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பதிவிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவு
திரையரங்குகளில் திரைப்படத்தைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கெனவே இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள சட்டவிரோதக் காட்சிகளை உடனடியாக நீக்குமாறும் பொதுமக்களிடம் தயாரிப்புக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தடையை மீறி வீடியோக்களைப் பதிவு செய்து பகிர்பவர்கள் குறித்துத் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என்றும், எந்தவித முன் அறிவிப்புமின்றி சிவில், குற்றவியல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் படக்குழு எச்சரித்துள்ளது.
திரைப்படத் திருட்டைத் தடுக்கும் நோக்கில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு திரையுலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கடல் தாண்டி ஒலிக்கும் ராமின் காவியம் – மலேசியா, சிங்கப்பூரில் ஓடிடியில் வெளியான ‘ஏழு கடல் ஏழு மலை’!
