விஜயின் சூப்பர் ஹிட் படங்கள் அடுத்தடுத்து ரீ- ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜய், தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளதால், இனி புதிய படங்களில் விஜயை திரையில் காண முடியாதே என அவரது ரசிகர்கள் ஏக்கத்திலும் வருத்தத்திலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
அந்த வகையில், விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று மீண்டும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தோடு ‘பைரவா’ திரைப்படமும் வெளியாவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், விஜயின் மற்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘திருப்பாச்சி’ மற்றும் ‘திருமலை’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. இதில், ‘திருப்பாச்சி’ திரைப்படம் வரும் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ‘திருமலை’ திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
அரசியல் பயணத்தால் விஜயை வெள்ளித்திரையில் காண முடியாமல் தவித்து வந்த ரசிகர்களுக்கு, அவரது பழைய வெற்றிப் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாவது பெரும் கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.
