விருதுநகர் நகராட்சியில் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
நகராட்சி அலுவலகத்திலேயே நடைபெற்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.4,000 லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.3,000 ஆகக் குறைப்பு
விருதுநகரைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர் தனது வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை அணுகியுள்ளார்.
அப்போது பெயர் மாற்றப் பணியைச் செய்து தருவதற்காக ரூ.4,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.3,000 வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்
லஞ்சம் கொடுக்க விரும்பாத மைக்கேல் ராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மைக்கேல் ராஜிடம் கொடுத்து அனுப்பினர்.
கையும் களவுமாகப் பிடித்து கைது
இன்று பிற்பகல் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை மைக்கேல் ராஜ், வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஹென்றி டேவிட்டைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
