Homeசெய்திகள்மாவட்டம்பல்லடத்தில் அனுமதி பெற்ற ஹாலோ பிளாக் நிறுவனத்தின் மின் இணைப்பு மீண்டும் துண்டிப்பு – தவெக...

பல்லடத்தில் அனுமதி பெற்ற ஹாலோ பிளாக் நிறுவனத்தின் மின் இணைப்பு மீண்டும் துண்டிப்பு – தவெக எம்எல்ஏ மீது சிறுதொழில் முனைவோர் புகார்!

-

- Advertisement -

எம்எல்ஏ ராம்குமாரின் உத்தரவின்பேரில் அரசியல் தலையீடு – மாவட்ட ஆட்சியரிடம் மனோஜ்குமார், செல்லசாமி புகார்

பல்லடத்தில் அனுமதி பெற்ற ஹாலோ பிளாக் நிறுவனத்தின் மின் இணைப்பு மீண்டும் துண்டிப்பு – தவெக எம்எல்ஏ மீது சிறுதொழில் முனைவோர் புகார்!

we-r-hiring

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் உரிய அரசு அனுமதிகளுடன் இயங்கி வந்த ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தின் மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட சிறுதொழில் முனைவோர் புகார் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமாரின் உத்தரவின்பேரிலேயே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள நிறுவன உரிமையாளர்கள் மனோஜ்குமார் மற்றும் செல்லசாமி, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

உரிய ஆவணங்கள் இருந்தும் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரம் ஊராட்சிப் பகுதியில் ‘சந்தோஷ் ஹாலோ பிளாக்’ என்ற சிறுதொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, தொழில் உரிமம் இல்லை எனக் கூறி நான்கு மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, நிறுவன உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். தொடர்ந்து தொழில் உரிமம், தொழில் வரி, ஜிஎஸ்டி பதிவு, எம்எஸ்எம்இ பதிவு உள்ளிட்ட உரிய ஆவணங்களைப் பெற்றுச் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், 15 கிலோவாட்டிற்குக் குறைவான மின் பயன்பாடு கொண்ட நிறுவனம் என்பதால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பசுமைப் பிரிவு சான்றிதழையும் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்குப் பிறகும் மீண்டும் துண்டிப்பு

அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கடந்த மாதம் 4ஆம் தேதி நிறுவனத்திற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைச் சீரமைத்து, கடந்த 7ஆம் தேதி காலை மீண்டும் தொழிலைத் தொடங்க முயன்றுள்ளனர்.

ஆனால், அன்றைய தினம் மாலையே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் உற்பத்திப் பணிகள் முடங்கி, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தவெக எம்எல்ஏ மீது அரசியல் தலையீடு புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் மனோஜ்குமார் மற்றும் செல்லசாமி கூறுகையில், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராம்குமாரின் உத்தரவு மற்றும் அரசியல் தலையீடு காரணமாகவே தங்களது நிறுவனத்தின் மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பலமுறை எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்றும் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், அரசியல் செல்வாக்கு மற்றும் கட்சியினருடனான தொடர்புகள் காரணமாகத் தங்களது நிறுவனத்திற்கு ஒருதலைப்பட்சமாகப் பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

முதலமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

சிறுதொழில் செய்து வாழ்வாதாரம் நடத்தி வரும் தங்களைப் போன்றோரின் தொழில் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த உரிமையாளர்கள், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தங்களது தொழிலை மீண்டும் தடையின்றி நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில் 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் – பல பகுதிகளில் குப்பைகள் தேக்கம்!

MUST READ