திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 17 வயது கல்லூரி மாணவியைத் திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றதாக எழுந்த புகாரில், தாய் மாமன் மகன் உள்ளிட்ட 15 பேரை அம்பலூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடத்தப்பட்ட மாணவியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த குடும்பத்தினர்
வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பர்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் தாய் மாமன் மகனான லட்சுமணன் என்பவர், மாணவியைத் திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், மாணவியின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் காரில் கடத்திச் சென்றதாகப் புகார்
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், தனது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று அதிகாலை மாணவியை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
கள்ளக்குறிச்சியில் மாணவியை மீட்ட போலீசார்
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்திச் செல்லப்பட்ட மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிகண்டன் என்பவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியைப் பத்திரமாக மீட்டனர்.
தாய் மாமன் மகன் உள்ளிட்ட 15 பேர் கைது
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் லட்சுமணன், விக்னேஷ், கிருஷ்ணமூர்த்தி, விஜய், பெரியசாமி, மணிகண்டன், சந்திரன், முருகன், கோவிந்தன், சீனிவாசன், மணிவண்ணன், மதன், கவிதா, நாகம்மாள், சுமதி ஆகிய 15 பேரை அம்பலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது கல்லூரி மாணவியைத் திருமணத்திற்காகக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பது வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
