கோவை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல், சாதிய ரீதியிலான அவமதிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களை அளித்துள்ளார். இந்தப் புகார் கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒன்றிய செயலாளர் மீது பாலியல் சீண்டல் புகார்
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் காளம்பாளையம் ஊராட்சிச் செயலாளராகப் பணியாற்றி வருபவர் சௌமியா. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் இவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, அவசர ஆலோசனைக் கூட்டம் எனக் கூறித் தன்னை அழைத்ததாகவும், கூட்டம் முடிந்து இரவு நேரமானபோது தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயன்றதாகவும் சௌமியா குற்றம்சாட்டியுள்ளார்.
தனது பாலியல் இச்சைக்கு உடன்பட மறுத்ததால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டு சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், கட்சியை விட்டு வெளியேற்றப் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்குச் சென்று மிரட்டியதாக மற்றொரு புகார்
சமீபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சௌமியா குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், மகளிர் அணி நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர் தனது வீட்டிற்கே வந்து கதவைத் தட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சௌமியா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தனக்கு விபத்து ஏற்படுத்திக் கொலை செய்ய ஒன்றிய செயலாளர் திட்டமிட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்-அப் தகவல்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண உதவி, பதவி தருவதாகப் பேசிய ஆடியோ?
இந்தப் பிரச்சினையை மூடி மறைக்கக் கோரி, ஒன்றிய செயலாளருக்கு நெருக்கமான சரவணன் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டதாகவும் சௌமியா கூறியுள்ளார்.
அப்போது பண உதவி மற்றும் பதவி வழங்குவதாகக் கூறி, ஆபாசமாகவும் பாலியல் ரீதியாகவும் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், அதற்கான ஆடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஏற்கெனவே கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான ஆபாசக் குறுஞ்செய்தி புகார் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பாலியல் சீண்டல், சாதிய அவமதிப்பு, மிரட்டல் உள்ளிட்ட புகார்களை முன்வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
சௌமியா அளித்துள்ள புகார்கள் தொடர்பாக காவல்துறை மேற்கொள்ளும் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தரப்பிலான விளக்கமும், காவல்துறையின் அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாக வேண்டியுள்ளது.
