Homeசெய்திகள்இந்தியாசோனியா காந்தியின் சுயசரிதை ‘Belonging: A Journey of Love’ – கேம்பிரிட்ஜ் காதல் முதல்...

சோனியா காந்தியின் சுயசரிதை ‘Belonging: A Journey of Love’ – கேம்பிரிட்ஜ் காதல் முதல் ராஜீவ் படுகொலை வரை;

-

- Advertisement -

கருணாநிதியுடனான கூட்டணி, புற்றுநோய் சிகிச்சை எனப் பல தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்த சோனியா!சோனியா காந்தியின் சுயசரிதை ‘Belonging: A Journey of Love’ – கேம்பிரிட்ஜ் காதல் முதல் ராஜீவ் படுகொலை வரை;

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியாகி அரசியல் வட்டாரத்திலும் வாசகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது இளமைப் பருவம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான காதல் மற்றும் திருமண வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்துடனான அனுபவங்கள், ராஜீவ் காந்தியின் படுகொலை, அரசியல் பயணம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான கூட்டணி உறவு, உடல்நலப் பிரச்சினைகள் எனத் தனது வாழ்வின் பல்வேறு முக்கியத் தருணங்களை இந்நூலில் சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.

கேம்பிரிட்ஜில் மலர்ந்த காதல் – ராஜீவின் எளிமை கவர்ந்த தருணம்!

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் கல்வி பயின்றபோது ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகனும், நேரு குடும்பத்தின் வாரிசுமாக இருந்தபோதிலும், எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த ராஜீவ் காந்தி தன்னைக் கவர்ந்ததாகச் சோனியா குறிப்பிட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜில் உள்ள உணவகத்தில் பகுதிநேரமாகப் பணியாற்றிய ராஜீவ், தன்னுடன் நேரம் செலவிடுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும், அவர்களுக்குள் மலர்ந்த காதலையும் நூலில் நினைவுகூர்ந்துள்ளார். ஆரம்பத்தில் தனது தந்தையிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், ராஜீவுடன் கடிதத் தொடர்பைத் தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் 1968 ஜனவரியில் இந்தியா வந்து அவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தியுடனான நெருக்கம் – அரசியலை விரும்பாத குடும்ப வாழ்க்கை

இந்தியாவுக்கு வந்த புதிதில், முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரச் சூழலிலும், இந்திரா காந்தியின் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பச் சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொள்வது சவாலாக இருந்ததாகச் சோனியா எழுதியுள்ளார். காலப்போக்கில் இந்திரா காந்தியுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டதையும், அவர் மீது அன்பு வளர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமில்லாதவராக இருந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வருவதைத் தடுக்கத் தான் முயன்றதாகவும், அதற்காக ஓராண்டுக்கும் மேலாகப் போராடியதாகவும் தெரிவித்துள்ளார். 1984-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று தான் வலியுறுத்தியதாகவும், அரசியல் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் இருந்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை – குடும்பத்தை உலுக்கிய துயரம்

1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத துயரமாக இருந்ததாகச் சோனியா குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் உயிரிழந்த செய்தியை மகள் பிரியங்கா தன்னிடம் தெரிவித்த தருணம், அவரது உடலை அடையாளம் காண வேண்டிய சூழல், இறுதிச் சடங்குகள் என அந்தக் காலகட்டத்தின் வேதனையான அனுபவங்களை நூலில் விவரித்துள்ளார்.

படுகொலைக்கு முன்னதாக ராஜீவின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினரிடையே கவலை இருந்ததாகவும், பாதுகாப்பு மேம்படுத்தப்படாவிட்டால் இறுதிச் சடங்கிற்காகவே அவர் திரும்ப வேண்டிய நிலை ஏற்படலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாகவும் சோனியா நினைவுகூர்ந்துள்ளார். தந்தையின் மரணச் செய்தியை அறிந்த ராகுல் காந்தியின் அதிர்ச்சியையும், குடும்பத்தினர் எதிர்கொண்ட துயரத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கருணாநிதியுடனான முதல் தொலைபேசி உரையாடல் – கூட்டணிக்கு வழிவகுத்த நட்பு

1998-ல் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, அரசியல் கூட்டணிகளின் அவசியத்தை உணர்ந்ததாகச் சோனியா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கையின் பின்னணியில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தனக்குள் தயக்கம் ஏற்பட்டதாகவும், அது ராஜீவின் நினைவுக்கு எதிரான செயலாகிவிடுமோ என்று யோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பாஜகவை எதிர்கொள்ள வலுவான கூட்டணி தேவை என்ற அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அப்போது திமுக தலைவராக இருந்த முத்தமிழறிஞர் கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக எழுதியுள்ளார். இருவருக்கும் பொதுவான மொழி இல்லாதபோதிலும், இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த ஆர்வம் உரையாடலுக்கு அடித்தளமாக அமைந்ததாகவும், முதல் உரையாடலே நட்பாகவும் இணக்கமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2004-ல் பிரதமர் பதவியை ஏற்க மறுத்த முடிவு

2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்கும் வாய்ப்பு சோனியா காந்திக்கு ஏற்பட்டது. ஆனால், அந்தப் பதவியைத் தான் ஒருபோதும் தனிப்பட்ட இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்றும், குடும்பத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களையும் கருத்தில் கொண்டு பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்ததாகவும் தனது நூலில் விளக்கியுள்ளார்.

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை – கணையத்தில் கண்டறியப்பட்ட கட்டி

தனது உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் இதுவரை அதிகம் வெளிப்படுத்தாத தகவல்களைச் சோனியா காந்தி இந்நூலில் பகிர்ந்துள்ளார். 2010-ல் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், இந்தியாவில் சிகிச்சை பெற்றால் ஊடகக் கவனம் அதிகரிக்கும் என்பதால் இத்தாலியின் மிலன் நகரில் சிகிச்சை பெற முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2011-ல் வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது கணையத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதற்காக நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கட்டி ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் பெரிய பாதிப்பிலிருந்து தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உடல்நிலை குறித்த அச்சம் ஏற்பட்டதால் ராகுல் மற்றும் பிரியங்காவுக்குச் சில வழிமுறைகளை எழுதி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதல், குடும்ப வாழ்க்கை, அரசியல் பொறுப்புகள், கணவரின் படுகொலை, கூட்டணி அரசியல், உடல்நலப் போராட்டம் எனப் பல்வேறு அனுபவங்களைத் தனது பார்வையில் பதிவு செய்துள்ள சோனியா காந்தியின் இந்தச் சுயசரிதை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்திய அரசியலின் முக்கியத் திருப்பங்களையும் இணைத்துப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை: “கடைசி நேரத் தடங்கலால் ராகுல் தப்பினார்” – பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து சோனியா காந்தி எழுப்பும் கேள்விகள்!

MUST READ